Friday, July 25, 2008

நீ எங்கே

நீ எங்கே: விவரணப் படம்

உச்சிக் குடும்பனும் இல்ல. . .உளுவத் தலையனும் இல்ல!திரைக்குப் பின்னால் இருந்துகொண்டு முதுகில் வியர்வை வழிய தோல் பாவைகளைக் கைகளாலும், கால்களாலும் ஆட்டுவித்த தோல்பாவைக் கூத்துக் கலைஞர்களின் இயக்கம் மெல்ல மெல்ல நின்றுபோனதை ஆவணப்படுத்துகிறது ரமணி இயக்கியுள்ள "நீ எங்கே?" விவரணப் படம்.மிக மிக அரிதாகிப்போன ஒரு பறவையினத்தை உலகின் வெவ்வேறு வன மூலைகளில் தேடி அலைகிற "டிஸ்கவரி சேனல்" பயணத்தைப் போல அமைந்துள்ளது ரமணி இயக்கியுள்ள இந்தப் படம். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலுள்ள ஏதேனும் ஒரு கிராமத்தில் பிளாஸ்டிக் வளையல் வியாபாரிகளாகவோ, மங்கிய வெளிச்சத்தில் ரஜினியையும் சிம்ரனையும் தத்ரூபமாக "இமிடேட்" செய்ய முயன்றுகொண்டேயிருக்கும் ரெக்கார்டு டான்ஸ்காரர்களாகவோ வாழ்ந்துகொண்டிருக்கும் தோல் பாவைக் கூத்துக் கலைஞர்களைப் படம் முழுவதும் ரமணி தேடுகிறார்.தேடப்படும் சில கலைஞர்கள் இறந்துவிட்டதை சோகம் உலர்ந்த முகங்களுடன் மனைவி, மக்கள் தெரிவிக்கிறார்கள். பெரும்பாலான கலைஞர்களின் வீடுகளில் தோல் பாவைகள் பரணில் ஏற்றப்பட்டுவிட்டன. நாம் வாழும் காலத்தை நகைச் சுவைத் திங்கள், காதல் செவ்வாய், வெள்ளி மின்னல்கள் என்று பகுத்து வைத்திருக்கும் கேபிள் டிவிகளின் வளர்ச்சியினூடே தங்கள் கலை மறக்கப்பட்டுவிட்ட கோபமும் சோறு போட்டுவந்த பாரம்பரியக் கலையை இழந்த சோகமும் இவர்களுக்கு இருக்கிறது.எந்த மொழியானாலும் ராமாயணக் கதைகள் தோல் பாவைக் கூத்தில் அதிகம் நிகழ்த்தப்படுவதை ரமணியின் படம் காட்டுகிறது. தமிழில் மட்டும் கூத்து அயோத்திக்குள் நுழைவதற்கு முன் திரேதா யுகத்திலிருந்து விடுபட்டு, நிகழ்காலத்தைப் பிரதிபலிக்கும் நகைச்சுவை கையாளப்படுகிறது. ராமனும் இலட்சுமணனும் தோன்றுவதற்கு முன்னர் உச்சிக் குடும்பனும் உளுவத் தலையனும் வந்து, ஊரில் ஏற்படும் எந்தப் பிரச்சினையையும் தேங்காய், பழம் சகிதம் பூசையாக்கிவிடத் துடிக்கும் கோவில் பூசாரியைக் கேலி செய்கிறார்கள். கர்நாடக, மகாராஷ்டிர மாநிலங்களில் வாழும் கலைஞர்கள் சமூகத்தின் இடதுகைத் தீண்டலிலிருந்து தப்பிப் பொருளாதார வசதிகள் அமையப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் தமிழத்துக் கலைஞர்களோ மாற்றுத் தொழிலுக்கான வாய்ப்பு சரியாக அமையாமல் நாடோடிகளாகத் திரிந்துகொண்டிருக்கின்றனர்.இயக்கத்தில் அதிகபட்ச சுதந்திரத்தைக் கையாளும் ரமணி சூழ்நிலை மீது கொண்டுள்ள கவனத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பரணிலிருந்து தோல் பாவைகளை எடுக்கும்போது வருஷக்கணக்கான உறக்கத்திலிருந்து விடுபட்டு ஓடும் கரப்பான் பூச்சி அனுமதிக்கும் மிகக் குறுகிய கால அவகாசத்தைக்கூட ரமணி பயன்படுத்திக்கொள்கிறார். படக்குழுவினரைக் கண்ட கலைஞர்களின் உடல் மொழியில் செயற்கைத்தனம் குடியேறுவதற்கு முன்னால் கேமரா அவர்களுடைய வீட்டில் முன்னறிவிப்பின்றி நுழைந்துவிடுகின்றது. ரமணிக்கும், அவர்களுக்குமான அறிமுகப் புன்னகைகூட பதிவு செய்யப்படுவதிலிருந்து தப்பவில்லை.வலுவான காட்சியமைப்பும் திறமையான படத்தொகுப்பும் கொண்ட இப்படத்தில் உறுத்தலான சில அம்சங்களும் இருக்கத்தான் செய்கின்றன. கூத்திலிருந்து சினிமா பாடல்களுக்கு ஆடும் தொழிலுக்கு நகர்ந்துவிட்ட ஒரு பெண் படக்குழுவினரின் வேண்டு கோளுக்கிணங்கத் தன் வீட்டில்ஆடும் நடனக் காட்சியைப் பார்க்கும்போது மனசுக்குள் அசூயை தெறிக்கிறது. மேடையில் நிகழும் நடனக் காட்சிகள் இக்கலைஞர்களின் சோகத்தைச் சொல்லி முடித்துவிட்ட நிலையில், இக்காட்சிகள் தேவை குறித்த கேள்வி எழுகிறது. நடனத்தையே பிழைப்பாகக் கொண்ட அக்கலைஞர்களின் தொழில் சார்ந்த பிரச்சினைகளையும் பேசவைத்திருக்கலாம்.நாளைய கூத்தில் ராமருக்குப் பட்டாபிஷேகம் நடைபெறுமென வசிஷ்டருக்குரிய பெருமையுடன் கேரளக் கலைஞர் நாள் குறிப்பதையும், கூத்து முடிந்த பிறகு நிச்சயம் மழை பெய்யும் என்று எதிரொளியின் நம்பிக்கையைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் உறுதியுடன் கூறுவதையும் பார்க்கையில் தங்கள் கலைமீது இவர்கள் கொண்டிருக்கும் பெருமிதத்தின் உச்சத்தையும், புறக்கணிக்கப்பட்டுவிட்ட வேதனையிலிருந்து விடுபட முடியாத தவிப்பையும் ஒருசேர உணர முடிகிறது. கேமராவின் பார்வைக்கு வைக்கப்படும் தோல் பாவைகளை நோக்கி குழந்தை நகரும்போது ""இனி உச்சிக் குடும்பனும் இல்ல. . . உளுவத் தலையனும் இல்ல"" என்று அதனுடைய தாய் விரக்தியை மறைத்துச் சிரிப்பது மறக்க முடியாத இன்னொரு காட்சி.

நன்றி: காலச்சுவடு -49

No comments: