Wednesday, January 14, 2009

வரவேற்போம் வாழத்தூண்டும் வரலாறுகளை

வரவேற்போம் வாழத்தூண்டும் வரலாறுகளைகெங்கை குமார்உழைக்கும் மக்களின் உள்ளக் குமுறல்களை ஓங்கி ஒலிப்பதாக கூறிக் கொண்டி ருக்கும் வெகுமக்கள் ஊடகங்களின் ஒவ்வொரு நகர்வையும் நாம் கண்காணித்திருக்க வேண்டும். சூழ்நிலை கேற்றவாறு பரபரப்புச் செய்திகளாகக் குடிசைகளை எறிப்பதை தீவிபத்து என்றும், கற்பழிப்புகளை விபச்சாரம் என்றும், கொத்தடிமை முறைகளை குழந்தை களை விற்றல் என்றும், உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக் கின்றன.இவைகளுக்கு மாற்றாக உழைக்கும் மக்களைப் பற்றியும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியும் அவர்களது உள்ளக் கிடக்கைகளையும் விழிப்புணர்வுப் படைப்புகளாகக்குகிற முயற்சிகளும் நடக்கின்றன. சூழலுக் கேற்றவாறு சில சமயங்களில் அவை வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இவைகளில் கூட அனுதாபங்களையும் பிறரின் பச்சாதாபங் களையும் பெறுகின்ற வகையில்தான் பெரும்பாலும் வருகின்றனவே தவிர உண்மையான விடுதலைக் கருத்தியாகவோ அல்லது அதை நோக்கி இட்டுச் செல்பவைகளாகவோ இன்னும் செழுமை பெறவில்லை.உழைக்கும் மக்கள் தங்களின் கூன் முதுகை உயர்த்தி நெஞ்சை நிமிர்த்தி அநீதிக்கு எதிராகவும், ஒடுக்குதலுக்கு முரனாகவும் தங்களை அடையாளப்படுத்தி, அணிதிரண்டு போராடிய போராட்டங்கள் பல நடந்திருந்தாலும், இன்றும் நிகழ்ந்துக் கொண்டிருந்தாலும், அவைகளின் வரலாற்றுப் பதிவுகள் என்பது இன்றளவும் மேம்போக்ககாகத்தான் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.``வரலாற்றைத் திருத்தி பதிவு செய்துக் கொண்டிருக்கும் வந்தேதிகாளல்தான் நம் முடைய உண்மைச் சுவடுகளும் மூடிமறைக்கப்பட்டு வருகிறது’’ என நாம் பிறரைக் குற்றம் சுமத்திக் கொண்டிருக்கிறோமே தவிர, நமக்கான வரலாறுகளை, காயங்களை புறை யோடிப் போயிருக்கும் அழுகிய புண்களாக நாம் எப்போது முறையாகப் பதிவு செய்யப் போகிறோம்?ஆங்காங்கு நடத்துக் கொண்டிருக்கும் உரிமை மீறல்களையும் ஒடுக்கப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகளையும் அட்டூழியங்களையும் எங்கோ ஒருசிலர் ஒரு சில உதவி களோடு, பதிவுகளாக படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.தமிழகத்தைப் பொறுத்தவரையிலும் தலித் விடுதலைக்காக குரல் கொடுத்துக் கொண்டுவரும் சில அமைப்புகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், சில இடங்களில் இயங்கிக் வருகின்றன. என்றாலும், அவைகளுக்கான ஆவணப்பதிவுகளின் நோக்கம் வரலாற்றுப் பதிவுகளாக ஒருபோதும் இருந்ததில்லை. தங்களது அமைப்பு மற்றும் சுயதேவைகளை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டவைகளாகவே இருக் கின்றன.எப்படியிருந்தாலும் ஒருசில ஆர்வலர்கள், இளம்படைப்பாளிகள் இந்த சமூகத்தின் மீது தாம் கொண்டுள்ள தன்னார்வ அக்கறையின் காரணமாக பிறப்பால் தலித்துகளாக இல் லாத நிலையிலும், வர்க்கத்தால் கூலிகளாக இல்லையென்றாலும், உழைக்கும் மக்களின் பிரச்சனைகளை, அவர்களின் வாழ்வியல் போராட்டங்களை அதிலும் குறிப்பாக தலித்து களின் ஒருங்கிணைந்த போராட்டங்களின் மூலம் பெற்ற வெற்றிக் கொண்டாட் டங்களையும், பண்பாடு மாறாமல் பதிவு செய்துத் தரும்போது, அவைகளுக்கான முக்கியத் துவத்தை முன்னிலைப் படுத்தாமல், அந்தப் படைப்பாளிகளுக்கான அங்கீகாரத்தை கொடுக்காமல், சாதி முத்திரை குத்திப்பார்த்தும் வர்க்கப் பின்னணியை பொருத்திப் பார்த் தும் அவர்களையும், அவர்களது படைப்புகளையும் ஓரங்கட்டுவது என்பது எந்த வகையில் நேர்மையானதாகும்?காஞ்சனை சீனிவாசனின் நதியின் மரணம், மதுரை அமுதனின் பீ, செய்யாறு ஓம் பிரகாஷின் புதுயுகம், தலீத் பூமி சேலம் ஆண்டோவின் தும்பலில் இன்று குடியரசு தினம், முருக சிவக்குமாரின் விடுதி, பாரதி கிருஷ்ணகுமாரின் ராமய்யாவின் குடிசை என இன்னும் பல அற்புதமான படைப்பாளிகளும், அவர்களது ஈடு இணையற்ற படைப்பு களும் இன்னும் பட்டியல்களாகத்தானே இருந்து கொண்டிருக் கின்றன?குறுங்குழுவாதம் பேசிக் கொண்டும், குரூர சிந்தனையை வளர்த்துக் கொண்டும் சிலர் பேசிக் கொண்டிருக்கும் அதே வேளையில் இத்தகைய படைப்பாளிகளும், படைப்புகளும் பல் வேறு தளங்களில் பலவிதமான பாதிப்புகளையும் அதிர்வுகளை யும் ஏற்படுத்திக் கொண்டுதானிருக்கின்றன. அவைகளை ஜீர ணிக்க முடியாமல் முரண்பாடாக சிலர் முணகிக்கொண்டி ருப்பதினால் என்ன பயனை அடைந்துவிட முடியும்!கருத்துச் சுதந்திரமும், சமூக அக்கறையும் கைகோர்த்துக் கொண்டு வரும்போதுதான் நம்மீது திணிக்கப்பட்டுள்ள, நாமாக உள்வாங்கிக் கொண்டுள்ள வர்க்க, வர்ண- முரண் பாடுகளை உடைத்துக் காட்டமுடியும். அவைகளைக் கடந்து வெளிவர முடியும். அதை விட்டுவிட்டு தர்மம் பேசுகிறேன் பேர் வழி என்று போலி புரட்சிவாதம் பேசிக் கொண்டுஅநீதியான சமூக கட்டமைப்பை ஞாயப்படுத்திக் கொண்டு தங்களுக்கான சார்புத் தன்மையோடு வர்ண- வர்க்கவாதம் நடத்திக் கொண்டு, உண்மையான படைப்பாளிகளையும் அவர்களது படைப்புகளையும் புறக்கணிக்கிறார்கள் என்றால் இப்படிப்பட்ட வர்களை எந்த ரகத்தில் பொருத்திப் பார்ப்பது?கடந்த ஜூலை 14 அன்று சென்னை டான் போஸ்கோ சமூகத் தொடர்பு கல்விமையம்-தீபிகா அரங்கில் அதிர்வுகள் திரைப்பட இயக்கத்தின் சார்பில் `` ஊடகமும் உழைக்கும் மக்களும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப் பட்டது. “ஆவணப்படங்களும் அவை தரும் பாதிப்புகளும்” என்ற தலைப்பில் காஞ்சனை சீனிவாசன் பேசினார். பாரதி கிருஷ்ண குமார் கருத்துரை வழங்கினார்.`அடங்கமறு’ என்ற ஆவணக் குறும்படத்தை உருவாக்கிய இளம் படைப்பாளி ஜே.முத்துக் குமார் பேசும்போது, “இது ஆவணக் குறும்படமல்ல. நான் இதைக் குறும்படமாகத்தான் எடுத்தேன்” என்றார்.இந்த “அடங்கமறு” படைப்பானது, 2002ம் ஆண்டு திண் ணியம் கிராமத்தில் இரண்டு தலித்துகளை மனித மலம் திண்ணவைத்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த சம்பவமும் செய்தியும் உண்மையானதே. அதை அப்படியே நடிகர்களைக் கொண்டு உருவாக்கி அதன் மேல் எந்தவிதமான விமர்சனத்தையும் வைக்காமல், எந்தவிதமான விளக்கமும் கொடுக்காமல் படைப்பாக்கி வழங்கப்பட்டிருக்கிறது.தலித் மக்கள் அவமானப்படுத்தப்பட்டதும், அதன் உச்சமாக மனித மலத்தை அவர்களது கையாலே அள்ளி உண்ணச் செய் ததும் உலகறிந்த ஒரு மோசமான வன்கொடுமை. இது வரலா றாக பதிவு செய்யப்படாமல், “ எனது கற்பனையால் உருவாக்கப் பட்ட புனைகதைக் குறும்படம்” என்பது நியாயம்தானா? இது குறித்து பார்வையாளர்கள் மத்தியிலிருந்து பல்வேறுவிதமான கேள்விகள் எழுந்ததைத் தொடர்ந்து இந்தப் படைப்புக்கு பின் புலமாயிருந்த பல அம்சங்ளை முத்துக்குமார் பகிர்ந்து கொண் டார்.பார்வையாளர்களிடமிருந்து, “இந்தச் சம்பவம் நடந்த கால கட்டத்தையோ, இதில் சம்பந்தப்பட்டவர்களின் உணர்வுப் பதிவு களையோ ஏன் இதில் இடம்பெறச் செய்யவில்லை” என கேள்வி கள் எழுந்தன. “நீங்கள் குறிப்பிடுகின்ற அனைத்து அம்சங் களையும் உள்ளடக்கிய இன்னொரு பிரதியை நான் பாதுகாப் பாக வைத்திருக்கிறேன். அதுதான் ஆவணக் குறுபம்படம். அதை இங்கு திரையிட நான் தவறிவிட்டேன்” என முத்துக் குமார் பதிலளித்தார்.படைப்பாளிகள் தங்களை முதன்மைப்படுத்திக்கொள்ளவும், அறிவு ஜீவித்தனத்தை வெளிக்காட்டிக்கொள்ளவும் எத்தனை வகையான அணுகுமுறைகளைக் கையாள்கிறார்கள் என்பதற் கான ஒரு உதாரணம்தான் மேற்கண்ட விவாதம். தமக்கென ஒரு குறுகிய வட்டத்தை அமைத்துக்கொண்டு, தன்னை மட்டுமே முதன்மைப்படுத்தி முன்னேறத் துடிக்கும் சிலரால்தான் “தலித்துகளின் வேதனையை தலித்துகளால்தான் உணர முடியும். தலித்துகள் அல்லாதவர்கள் தலித்துகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை” என்ற வாதம் கிளம்புகிறது. இத் தகைய போக்கு எல்லா இடங்களிலுமே இருக்கிறது. தலித் துகளிலேயே கூட தலித் விரோதிகள் இருக்கிறார்கள் என்ப தையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எப்படியிருந்தாலும் தலித் அக்கறை, சமூக அக்கறை, அனைத்துமே சமூக விடு தலைக்கான முன்னெடுப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது விருப்பம்.படைப்பாளிகளும், படைப்புகளும் வணிகமய நோக்கில் பார்வையாளர்களை மட்டும் மையப்படுத்தாமல் ஆய்வுக் கண் ணோட்டத்துடன் உண்மைகளை மட்டுமே ஆவணப்பதிவு களாக, வரலாறுகளாக வலம் வர வேண்டும். அதற்கான நியாய மான வாய்ப்புகளை தனி நபர்களோ, நிறுவனங்களோ எவ்வித உள்நோக்கமுமின்றி வழங்க முன்வர வேண்டும்.வர்ணபேதமும், வர்க்க முரண்பாடுகளும் ஒடுக்கப்படும் மக்க ளின் வரலாற்றை அதைத் தொடர்ந்து கடைப்பிடித்துக்கொண்டு வரும் போலிப் புரட்சியாளர்களை அடையாளம் காட்ட வேண்டிய கட்டாயத்தில் நாமிருக்கிறோம்.எனவே, எதையும் நேர்மையோடு அணுகி, கூர்மைப்படுத்திப் பார்க்கும் பக்குவம் இளம் படைப்பாளிகளுக்கும் வர வேண்டும். அத்தகைய முயற்சிகளை எவ்வித உள்நோக்கமுமின்றி, அங் கீகரிக்கின்ற பக்குவத்தை அனைவருமே வளர்த்துக் கொண்டாக வேண்டும். அப்போதுதான் உழைக்கும் மக்களை யும், ஒடுக்கப்படும் மக்களையும் உரிமைக்காகப் போராட வைக்க, நாமும் உந்து சக்திகளாய் இருந்திருக்கிறோம் என்பது வரலாற் றில் பதிவு பெறும். இத்தகைய வரலாறுகள்தான் நாளைய தலை முறையினருக்கு உண்மையான உந்து சக்திகளாக இருக்க முடியும்.பரவலாக இருந்துகொண்டிருக்கிற குறுங்குழுவாதங் களைத் தவிர்த்து, கூட்டுச் சிந்தனைகளை வளர்ப்போம். விழிப் புணர்வையும், விமர்சனப் பார்வையையும் வீதிக்குக் கொண்டு வருவோம். ஊடக ஜனநாயகத்தை உழைக்கும் மக்கள் சார்ந்த அணுகுமுறைகளால் உலகுக்கு அறிமுகப்படுத்துவோம். அதன் மூலம் உழைக்கும் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் உரிமையோடு பங்கெடுப்போம்.

நன்றி : உரக்க
http://urakkappesu.blogspot.com/2007/08/blog-post.html

Sunday, December 28, 2008

தமிழ் ஸ்டுடியோ.காம்

தமிழ் ஸ்டுடியோ.காம்
அறிவிப்பு
வணக்கம் தோழர்களே...
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் (www.thamizhstudio.com) எனும் குறும்படங்களுக்கான இணையத்தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்கள் இணையதளத்தின் நோக்கங்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன. எங்கள் இணையதளத்தின் முக்கிய நோக்கமே மற்றவர்கள் பயன் பெற வேண்டும் என்பதே. எனவே உங்களின் மேலான கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டும், எங்கள் தளம் பயனுள்ளது என்றுக் கருதினால் உங்கள் வட்டங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும்படியும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
www.thamizhstudio.com
தமிழில் ஒரு மாற்று ஊடகம் அமைக்கும் முயற்சியில் தொடங்கப்பட்டதே இந்தத் தளம். குறும்படத்துறை, தமிழ் இலக்கியம், வரலாறு போன்ற துறைகளுக்கு தமிழ் ஸ்டுடியோ.காம் முன்னுரிமை அளித்து செயல்படுகிறது. எந்த செயலை செய்தாலும் அதை புதிதாக, புதிய கோணத்தில் செய்யும் முயற்சியில் தமிழ் ஸ்டுடியோ.காம் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கும்.
தமிழில் மாற்று ஊடகம் அமைக்கும் முயற்சியின் முதல் படியாக குறும்படத் துறையை / அது சார்ந்த ஆர்வலர்களை ஊக்குவிக்கும் செயலை தமிழ் ஸ்டுடியோ.காம் தொடர்ந்து செய்துக் கொண்டே இருக்கும். இலக்கியங்கள், புகழ் பெற்ற சிறுகதைகள், உலகில் உள்ள மாற்ற நாட்டு இலக்கியங்கள், அழிந்து வரும் வரலாற்று சின்னங்கள், மொழி, கலாச்சாராம் சார்ந்த ஆவணங்கள், கல்வெட்டு ஆவணங்கள், போன்றவற்றை குறும்படங்களாக / ஆவணப்படங்களாக எடுத்து அவற்றை மக்களிடையே பரவலாக கொண்டு போய் சேர்க்கும் முயற்சியில் தமிழ் ஸ்டுடியோ.காம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. மேலும் அவ்வாறு எடுக்கப்படும் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் போன்றவை உலகத்தரத்தில், புதிய தொழில்நுட்பங்களோடு எடுக்கப்படவேண்டும் என்கிற அக்கறையும் இங்கு கவனிக்கப்படும். புதிதாக குறும்படத்துறையில் நுழைய விரும்பும் ஆர்வலர்கள் அனைவருக்கும் அது பற்றிய முழுமையான ஒரு புரிதலை தமிழ் ஸ்டுடியோ.காம் ஏற்படுத்தும்.
மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் தமிழ் ஸ்டுடியோ.காம் செய்துக் கொடுக்கும் என்பதையும் இங்கு தெரியப்படுத்துகிறோம். ஆர்வமும் முயற்சியும், துடிப்பும், படைப்புத்திறனும், எதையும் புதுமையாக சிந்திக்கும் ஆர்வமும் உள்ளவரா நீங்கள்? எனில் உங்களுக்கான களம் அமைத்துக்கொடுக்கும் பணியை தமிழ் ஸ்டுடியோ ஏற்றுக்கொள்ளும்.
இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்காகவும் ஒரு களம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே தளத்தை பார்வையிடும் உங்களுக்கும் எழுதும் ஆர்வமோ, ஒளிப்படம் எடுக்கும் ஆர்வமோ, அல்லது ஏதோ ஒருத் துறையில் (அறிவியல், சமூகம், வானவியல் போன்ற துறைகளையும் சேர்த்து) உங்களுக்கு ஆர்வம் இருந்தாலும் அதை வெளிப்படுத்த தமிழ் ஸ்டுடியோ.காம் உங்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும்.
நன்றி, தமிழ் ஸ்டுடியோ.காம் (www.thamizhstudio.com) Copyright:thinnai.com 

Friday, July 25, 2008

நீ எங்கே

நீ எங்கே: விவரணப் படம்

உச்சிக் குடும்பனும் இல்ல. . .உளுவத் தலையனும் இல்ல!திரைக்குப் பின்னால் இருந்துகொண்டு முதுகில் வியர்வை வழிய தோல் பாவைகளைக் கைகளாலும், கால்களாலும் ஆட்டுவித்த தோல்பாவைக் கூத்துக் கலைஞர்களின் இயக்கம் மெல்ல மெல்ல நின்றுபோனதை ஆவணப்படுத்துகிறது ரமணி இயக்கியுள்ள "நீ எங்கே?" விவரணப் படம்.மிக மிக அரிதாகிப்போன ஒரு பறவையினத்தை உலகின் வெவ்வேறு வன மூலைகளில் தேடி அலைகிற "டிஸ்கவரி சேனல்" பயணத்தைப் போல அமைந்துள்ளது ரமணி இயக்கியுள்ள இந்தப் படம். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலுள்ள ஏதேனும் ஒரு கிராமத்தில் பிளாஸ்டிக் வளையல் வியாபாரிகளாகவோ, மங்கிய வெளிச்சத்தில் ரஜினியையும் சிம்ரனையும் தத்ரூபமாக "இமிடேட்" செய்ய முயன்றுகொண்டேயிருக்கும் ரெக்கார்டு டான்ஸ்காரர்களாகவோ வாழ்ந்துகொண்டிருக்கும் தோல் பாவைக் கூத்துக் கலைஞர்களைப் படம் முழுவதும் ரமணி தேடுகிறார்.தேடப்படும் சில கலைஞர்கள் இறந்துவிட்டதை சோகம் உலர்ந்த முகங்களுடன் மனைவி, மக்கள் தெரிவிக்கிறார்கள். பெரும்பாலான கலைஞர்களின் வீடுகளில் தோல் பாவைகள் பரணில் ஏற்றப்பட்டுவிட்டன. நாம் வாழும் காலத்தை நகைச் சுவைத் திங்கள், காதல் செவ்வாய், வெள்ளி மின்னல்கள் என்று பகுத்து வைத்திருக்கும் கேபிள் டிவிகளின் வளர்ச்சியினூடே தங்கள் கலை மறக்கப்பட்டுவிட்ட கோபமும் சோறு போட்டுவந்த பாரம்பரியக் கலையை இழந்த சோகமும் இவர்களுக்கு இருக்கிறது.எந்த மொழியானாலும் ராமாயணக் கதைகள் தோல் பாவைக் கூத்தில் அதிகம் நிகழ்த்தப்படுவதை ரமணியின் படம் காட்டுகிறது. தமிழில் மட்டும் கூத்து அயோத்திக்குள் நுழைவதற்கு முன் திரேதா யுகத்திலிருந்து விடுபட்டு, நிகழ்காலத்தைப் பிரதிபலிக்கும் நகைச்சுவை கையாளப்படுகிறது. ராமனும் இலட்சுமணனும் தோன்றுவதற்கு முன்னர் உச்சிக் குடும்பனும் உளுவத் தலையனும் வந்து, ஊரில் ஏற்படும் எந்தப் பிரச்சினையையும் தேங்காய், பழம் சகிதம் பூசையாக்கிவிடத் துடிக்கும் கோவில் பூசாரியைக் கேலி செய்கிறார்கள். கர்நாடக, மகாராஷ்டிர மாநிலங்களில் வாழும் கலைஞர்கள் சமூகத்தின் இடதுகைத் தீண்டலிலிருந்து தப்பிப் பொருளாதார வசதிகள் அமையப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் தமிழத்துக் கலைஞர்களோ மாற்றுத் தொழிலுக்கான வாய்ப்பு சரியாக அமையாமல் நாடோடிகளாகத் திரிந்துகொண்டிருக்கின்றனர்.இயக்கத்தில் அதிகபட்ச சுதந்திரத்தைக் கையாளும் ரமணி சூழ்நிலை மீது கொண்டுள்ள கவனத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பரணிலிருந்து தோல் பாவைகளை எடுக்கும்போது வருஷக்கணக்கான உறக்கத்திலிருந்து விடுபட்டு ஓடும் கரப்பான் பூச்சி அனுமதிக்கும் மிகக் குறுகிய கால அவகாசத்தைக்கூட ரமணி பயன்படுத்திக்கொள்கிறார். படக்குழுவினரைக் கண்ட கலைஞர்களின் உடல் மொழியில் செயற்கைத்தனம் குடியேறுவதற்கு முன்னால் கேமரா அவர்களுடைய வீட்டில் முன்னறிவிப்பின்றி நுழைந்துவிடுகின்றது. ரமணிக்கும், அவர்களுக்குமான அறிமுகப் புன்னகைகூட பதிவு செய்யப்படுவதிலிருந்து தப்பவில்லை.வலுவான காட்சியமைப்பும் திறமையான படத்தொகுப்பும் கொண்ட இப்படத்தில் உறுத்தலான சில அம்சங்களும் இருக்கத்தான் செய்கின்றன. கூத்திலிருந்து சினிமா பாடல்களுக்கு ஆடும் தொழிலுக்கு நகர்ந்துவிட்ட ஒரு பெண் படக்குழுவினரின் வேண்டு கோளுக்கிணங்கத் தன் வீட்டில்ஆடும் நடனக் காட்சியைப் பார்க்கும்போது மனசுக்குள் அசூயை தெறிக்கிறது. மேடையில் நிகழும் நடனக் காட்சிகள் இக்கலைஞர்களின் சோகத்தைச் சொல்லி முடித்துவிட்ட நிலையில், இக்காட்சிகள் தேவை குறித்த கேள்வி எழுகிறது. நடனத்தையே பிழைப்பாகக் கொண்ட அக்கலைஞர்களின் தொழில் சார்ந்த பிரச்சினைகளையும் பேசவைத்திருக்கலாம்.நாளைய கூத்தில் ராமருக்குப் பட்டாபிஷேகம் நடைபெறுமென வசிஷ்டருக்குரிய பெருமையுடன் கேரளக் கலைஞர் நாள் குறிப்பதையும், கூத்து முடிந்த பிறகு நிச்சயம் மழை பெய்யும் என்று எதிரொளியின் நம்பிக்கையைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் உறுதியுடன் கூறுவதையும் பார்க்கையில் தங்கள் கலைமீது இவர்கள் கொண்டிருக்கும் பெருமிதத்தின் உச்சத்தையும், புறக்கணிக்கப்பட்டுவிட்ட வேதனையிலிருந்து விடுபட முடியாத தவிப்பையும் ஒருசேர உணர முடிகிறது. கேமராவின் பார்வைக்கு வைக்கப்படும் தோல் பாவைகளை நோக்கி குழந்தை நகரும்போது ""இனி உச்சிக் குடும்பனும் இல்ல. . . உளுவத் தலையனும் இல்ல"" என்று அதனுடைய தாய் விரக்தியை மறைத்துச் சிரிப்பது மறக்க முடியாத இன்னொரு காட்சி.

நன்றி: காலச்சுவடு -49

Sunday, July 20, 2008

சலனம் - குறும்படங்களுக்காண இணையம்

www.salanam.com

சலனம், இணையத்தில் தமிழ் குறும்படங்களுக்கென்றே இயங்கும் தளம். குறும்படங்கள் மட்டுமின்றி அது சார்ந்த செய்திகளையும் நேர்காணல் போன்றவையும் வெளியிடுகிறது.

சலனம் பற்றி சலனத்தில்...............
வணக்கம்
தமிழில் சற்று வித்தியாசமானதோர் இணையம் இது. 'நமக்கென்றோர் நலியாக்கலையுடையோம்" - எனத் தேடலும், பதிவுமாக இதன் பக்கங்கள் விரிவடையும்.
கலைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அரங்க மற்றும் திரைக்கலை, இரசனைக்கான தளம்தான் இந்தச் சலனம்.
புத்தாயிரத்தில் உருவான இவ்வெண்ணக்கரு 'அப்பால் தமிழ்"த் தாயில் உருவகமாகி, மெல்லத் தவழ்ந்து, நடைபயின்று, நிமிர்கிறது.
பிரான்சில், லூமியர் சகோதரர்களால் முதல் அசையும் பட ஒளிப்பதிவைச் செய்த 1895 மார்ச் 19ம் நாளை மகிழ்வுடன் நினைவு கூர்ந்து இணையவலைப் பதிவாகிறது சலனம்.
நம் சமூக கலைசார் ஈடுபாட்டால் ஒன்றிணையவும், பணியாற்றவும், தன்னார்வத்துடன் கைகோர்த்த ஆற்றலாளர்களின் கூட்டு வெளிப்பாடாகவே சலனம் பதியமாகின்றது.
இதேவேளை புலம்பெயர் வாழ்வுச் சூழலுக்கமைவான பல்தேசிய சமூகக்கலைகளுடன்; நேசவுறவாடும். அவற்றில் ‘நல்லவை உள்வாங்கி அல்லவை அகற்றி’ தனக்கான தடமமைத்துச் செல்லும்.
கடந்த நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்து நம் சமூகம் பூமிப் பந்தில் பெற்றுக்கொண்ட – கொண்டிருக்கும் எண்ணற்ற அனுபவங்கள் நம்மவர்களாலேயே கலைப்படைப்புகளாகப் பதிவுறவேண்டும் என்பதிலும் சலனம் அக்கறை கொள்கிறது.
கலை ஆற்றலாளர்கள், ஆர்வலர்கள், கரிசனையாளர்கள், இரசனையாளர்கள், விமர்சகர்கள், பார்வையாளர்கள் எனப் பலரும் தமது இனிய பயணத்தைத் சலனத்தில் தொடர வாழ்த்துகள்.
பாரிஸ்19.03.2006 ஞாயிறு வள்ளுவர் ஆண்டு 2037 பங்குனி 06
வணக்கம்
இணையவழி கைகுலுக்குகிறோம்
வாழ்க வளமுடன்!

Tuesday, July 15, 2008

காணி நிலம்

நன்றி : ஆனந்த விகடன் 28.05.08





இரை

நன்றி : ஆனந்த விகடன் 18.06.08

எரியும் நினைவுகள்

நன்றி : ஆனந்த விகடன் 11.06.08